குறள் 1170:
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
பரிமேலழகர் விளக்கம்
(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.