குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்;அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.
பரிமேலழகர் விளக்கம்
('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.