குறள் 1151:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை
மு.வரதராசன் விளக்கம்
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.
பரிமேலழகர் விளக்கம்
(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.