குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

With butter-oil extinguish fire! 'Twill prove Harder by scandal to extinguish love
அதிகாரம் - 115 - அலரறிவுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது,எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.