குறள் 1119:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me, Shine for my eyes alone, O moon, shine not for all to see
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய்ப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.