குறள் 1113:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend; Darts are the eyes of her whose shoulders like the bambu bend
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி,மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!
பரிமேலழகர் விளக்கம்
(கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது.) வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும் (பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று, 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!