குறள் 1110:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
The more men learn, the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels decked
அதிகாரம் - 111 - புணர்ச்சிமகிழ்தல்
மு.வரதராசன் விளக்கம்
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.
பரிமேலழகர் விளக்கம்
(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல்.(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.