குறள் 111:

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain
அதிகாரம் - 12 - நடுவு நிலைமை
மு.வரதராசன் விளக்கம்
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.