குறள் 1104:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain
அதிகாரம் - 111 - புணர்ச்சிமகிழ்தல்
மு.வரதராசன் விளக்கம்
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.
பரிமேலழகர் விளக்கம்
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?