குறள் 1101:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel live
அதிகாரம் - 111 - புணர்ச்சிமகிழ்தல்
மு.வரதராசன் விளக்கம்
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.
பரிமேலழகர் விளக்கம்
(இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின. (உம்மை, முற்று உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது.வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.