குறள் 1099:

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyes
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.
பரிமேலழகர் விளக்கம்
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.