குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.(சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.