குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
As veil o'er angry eyes Of raging elephant that lies, The silken cincture's folds invest This maiden's panting breast
அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்;அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.
பரிமேலழகர் விளக்கம்
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.