குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes
அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது) கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பெண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து. (பெண்தகை: நாணம்,மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.