குறள் 1080:

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

For what is base man fit, if griefs assail? Himself to offer, there and then, for sale
அதிகாரம் - 108 - கயமை
மு.வரதராசன் விளக்கம்
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?