குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
The fragile bark of beggary Wrecked on denial's rock will lie
அதிகாரம் - 107 - இரவச்சம்
மு.வரதராசன் விளக்கம்
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது,இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.