குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth
அதிகாரம் - 107 - இரவச்சம்
மு.வரதராசன் விளக்கம்
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.
பரிமேலழகர் விளக்கம்
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.