குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so
அதிகாரம் - 107 - இரவச்சம்
மு.வரதராசன் விளக்கம்
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.