குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow sore
அதிகாரம் - 11 - செய்ந்நன்றி அறிதல்
மு.வரதராசன் விளக்கம்
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.
பரிமேலழகர் விளக்கம்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.