குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
What glory will there be to men of generous soul, When none are found to love the askers' role
அதிகாரம் - 106 - இரவு
மு.வரதராசன் விளக்கம்
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
பரிமேலழகர் விளக்கம்
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?