குறள் 1056:

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee
அதிகாரம் - 106 - இரவு
மு.வரதராசன் விளக்கம்
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.
பரிமேலழகர் விளக்கம்
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.