குறள் 1047:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face
அதிகாரம் - 105 - நல்குரவு
மு.வரதராசன் விளக்கம்
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை,அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.
பரிமேலழகர் விளக்கம்
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.