குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow
அதிகாரம் - 105 - நல்குரவு
மு.வரதராசன் விளக்கம்
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
பரிமேலழகர் விளக்கம்
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.