குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they live
அதிகாரம் - 104 - உழவு
மு.வரதராசன் விளக்கம்
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
பரிமேலழகர் விளக்கம்
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.