குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give
அதிகாரம் - 104 - உழவு
மு.வரதராசன் விளக்கம்
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால்,மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
பரிமேலழகர் விளக்கம்
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.