குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth
அதிகாரம் - 11 - செய்ந்நன்றி அறிதல்
மு.வரதராசன் விளக்கம்
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்