குறள் 1014:

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

And is not shame an ornament to men of dignity? Without it step of stately pride is piteous thing to see
அதிகாரம் - 102 - நாணுடைமை
மு.வரதராசன் விளக்கம்
சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.
பரிமேலழகர் விளக்கம்
சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.