குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known
அதிகாரம் - 102 - நாணுடைமை
மு.வரதராசன் விளக்கம்
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
பரிமேலழகர் விளக்கம்
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.