குறள் 1009:

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take
அதிகாரம் - 101 - நன்றியில்செல்வம்
மு.வரதராசன் விளக்கம்
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு,அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.