குறள் 1004:

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray
அதிகாரம் - 101 - நன்றியில்செல்வம்
மு.வரதராசன் விளக்கம்
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
பரிமேலழகர் விளக்கம்
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?